Tuesday 18 October 2016

குடிகாரர்களின் கவனத்திற்கு....


கீழே உள்ள படங்கள் கடந்த மே மாதத்தில் நான் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் செல்லும் சாலையில் உள்ள காமராஜர் அணையில் எடுத்தது. எவ்வளவு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா? உங்களால் தான் இந்ந நீர்நிலை எவ்வளவு மாசுபட்டுள்ளது தெரியுமா? ஒருபுறம் இதில் கலக்கும் ரசாயன கழிவுகள் மறுபுறம் குடிகாரர்களின் பாட்டில்கள், திண்பண்ட நெகிழிக் குப்பைகள். கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீர்களா?

இந்த அணையின் அழகை ரசிக்கத்தானே வருகின்றீர்கள்? அதன் அழகு பாதுகாக்கப்படவேண்டாமா? உங்கள் பிள்ளைகள் அதனை ரசிக்க வேண்டாமா? உங்கள் இழிவான செயல்களுக்கு பின் அதனால் ஏற்படும் கேடுகளை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?




ஒரு காலத்தில் இதில் விளையாடி இருக்கின்றோம் நாங்கள். இன்று நீரில் கை வைக்க முடிகிறதா? நாற்றமடிக்கிறது நீரில்...
                                                     
சரி கரையில் நடக்கத்தான் முடிகிறதா? கரையெங்கும் பாட்டில்களை உடைத்துப் போட்டிருக்கின்றீர்கள். உங்கள் வீடுகளில் இப்படித்தான் குடித்தபின் பாட்டில்களை உடைத்துப் போடுவீர்களா? நீங்கள் உடைத்துப் போட்டுச் சென்ற பாட்டில் சில்களால் எத்தனை குழந்தைகள் காயம்பட்டுள்ளன தெரியுமா? எத்தனை விலங்கள் அதில் பாதிக்கப்பட்டிருக்கும். அறிவுள்ளவன் இந்த இழிச் செயலை செய்வானா? ஒரு நாட்டை நேசிப்பது என்பது ஜனகனமன பாடுவதும், கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தால் பட்டாசு வெடிப்பதும் தான் என்று எண்ணியே வளர்ந்து வரும் பார்த்தீனியச் செடிகள் நீங்கள். அதுவல்ல இந்த மண்ணைப் பாதுகாப்பதும், இங்குள்ள மலைகள், மரங்கள், நதிகள், நிர்நிலைகள் உள்ளிட்ட யாவற்றையும் பாதுகாப்பதும் மக்களின் மீது அன்பு செலுத்துவதும் தான் உண்மையாக நாட்டை நேசிப்பது என்பது. அதுவும் சமீபகாலமாக இந்த செயல் இளைஞர்களிடத்தில் பெருகி வருகிறது.

                                                       குப்பைக் கழிவுகள், மது பாட்டில்கள்
நாலு பேர் சேர்ந்துவிட்டால் பாட்டில் வாங்கிக் கொண்டு ஊட்டிக்கு வருவது குடித்துவிட்டு குப்பையை வீசிவிட்டு செல்வது, பாட்டில்களை உடைத்துப் போடுவது அடேய் நீங்கள் வருவது குப்பைத் தொட்டியின் பக்கம் அல்ல மலைகளின் அரசியின் பக்கம்! இனிமேலாவது பாட்டில்களோடும், நெகிழிகளோடும் நெருங்காதீர்கள் நீலகிரியின் பக்கம் மட்டுமல்ல எந்த சுற்றுலா இடங்களுக்கும் தான்!

#Ban_plastics #Ban_liquor