Wednesday 14 March 2018

வனத்துறை மீது பழியை சுமத்திவிட்டு தப்பிக்க பார்க்காதீர்!




1962 ம் ஆண்டு பார்சன்ஸ்வேலி துக்காரமந்து சரக வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வன காப்பாளர்கள் திரு. தனஞ்செயன், திரு. வாசுதேவன், திரு. ராமசாமி மார்ச் 13ம் தேதி 1962 ல் தீப்புகையால் மூச்சுத்திணறி இறந்து போனார்கள். வனத்தைக் காக்க உயிர் நீத்த பலரில் இவர்களும் அடங்குவார்கள்.

ஆனால் இன்று வரை வனத்துறை பணியார்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் அரசால் கொடுக்கப்படவில்லை. 300 கோடிக்கு சாட்டிலைட் ஏவும் நாட்டில் எந்த நவீன கருவிகளும் வனத்துறையிடம் இல்லை. அவர்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லை. இன்னும் எதிர்த்தீ வைப்பு முறையே பின்பற்றப்படுகிறது. வருடத்தில் 5 மாதங்கள் வனத்தீ தடுப்பு காவலர்களை தற்காலிகமாக பணியமர்த்துகிறார்கள்.


தொடர்ச்சியாக வனப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக வாழ்க்கையைக் கடந்த வன அர்ப்பணிப்பாளர்களை எனக்குத் தெரியும். அவர்களின் அனுபவ அறிவு விசாலமானது. 
சமீபத்தில் மேட்டுப்பாளையம் அருகே யானைக் குட்டியை மீட்டு தோளில் சுமந்து சென்று தாயிடம் விட்ட தற்காலிகப் பணியாளர்களை நாம் பார்த்தோம். இந்த அரசு இவர்களைக் கண்டு கண்டு கொண்டதே இல்லை.

நீலகிரியில் வனஉயிர் காக்கும் மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டபின் அங்கு இதுவரை மருத்துவர் நியமிக்கப்படவில்லை.

வருடம் தோறும் தான் தீப்பற்றி எரிகிறது கானகங்களில் கடந்த இரு மாதஙகளாக தீ ஆங்காங்கே எரிந்து கொண்டுதானிருக்கிறது. நேற்று மலையேற்றத்திற்கு சென்றவர்கள் சிக்கிக் கொண்டதால் இப்போது விவாதிக்கப்படுகிறது.

மலையேற்றம் செல்பவர்களும் வனச்சூழல் அறிந்து செல்ல வேண்டும். கூடவே செல்லக்கூடிய வனத்தைப்பற்றி அறிந்தவர்கள் உடன் இருப்பது மிக அவசியம். சில மீடியாக்கள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசு தாமதமாக ஹெலிகாப்டர்களை அனுப்புகிறது.

எப்போதும் போல் மக்கள் தான் களத்தில் முதலில் இறங்கியுள்ளார்கள் அந்த குரங்கனி எஸ்டேட் மக்களுக்கு அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்வோம்.

அரசு நவீன கருவிகளை இனிமேலாவது வாங்க வேண்டும். வனத்துறையை இன்னும் நவீனப்படுத்த வேண்டும். இந்த தீவிபத்து மட்டுமல்ல எல்லா பேரிடர் காலங்களிலும் இது தான் நிலைமையாகவே இருக்கிறது.

மேலும் மக்களாகிய நாம் மட்டும் சரியாக இருக்கிறோமா? அந்த காட்டில் தீ வைத்த யார்?

முருங்கைப் பூ


முருங்கைப் பூ

முருங்கை, ஏராளமான சத்துக்களின் புகலிடமாகத் திகழ்கிறது. கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்ஃபர் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் புரதச்சத்துக்களும், உடல் நலத்துக்கு உதவும் கொழுப்பு அமிலமான ஒலீயிக் அமிலமும் (Oleic acid) இதில் அடங்கியுள்ளன. ஆனாலும்கூட, முருங்கையின் பலன்களை நாம் முழுமையாகப் பெறுவதில்லை.

இதில் இருந்து கிடைக்கக்கூடிய இலை மற்றும் காய்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். பெரும்பகுதி விரயம் செய்யப்படுகிறது.
பூ மற்றும் விதைகள் முற்றிலுமாகவே கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. முருங்கைப் பூ, காய், விதை, இலை அனைத்தையுமே மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முடியும்.
முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளுடன் சேர்த்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் அதிக நாட்டம் உண்டாகும்.

முருங்கைப் பூ தேநீர்:

முருங்கைப் பூவை உலர வைத்து, தூளாக்கி, தேயிலை போல் பயன்படுத்தலாம். முருங்கைப் பூ தேயிலை, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

சித்தர்கள் முருங்கை குறித்து பாடியுள்ளனர்.

அகத்தியர் குணபாடத்தில்,
"விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி."

என்று பாடியுள்ளார்.

பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
ஆண்களுக்கு:
உடல் சோர்ந்து உள்ளம் சோர்ந்து போனவர்கள் தினமும் நான்கைந்து முருங்கைப்பூக்களைத் தினமும் இரண்டுவேளை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூவைச் சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

குழந்தைகளுக்கும் இது அதிக இரும்புச்சத்துகொண்டதால் நல்ல பலனளிக்கும். ஞாபக சக்தியை பலப்படுத்தும். கண்களுக்கும் நல்ல சக்தியைத் தரும்.