Wednesday 14 March 2018

வனத்துறை மீது பழியை சுமத்திவிட்டு தப்பிக்க பார்க்காதீர்!




1962 ம் ஆண்டு பார்சன்ஸ்வேலி துக்காரமந்து சரக வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வன காப்பாளர்கள் திரு. தனஞ்செயன், திரு. வாசுதேவன், திரு. ராமசாமி மார்ச் 13ம் தேதி 1962 ல் தீப்புகையால் மூச்சுத்திணறி இறந்து போனார்கள். வனத்தைக் காக்க உயிர் நீத்த பலரில் இவர்களும் அடங்குவார்கள்.

ஆனால் இன்று வரை வனத்துறை பணியார்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் அரசால் கொடுக்கப்படவில்லை. 300 கோடிக்கு சாட்டிலைட் ஏவும் நாட்டில் எந்த நவீன கருவிகளும் வனத்துறையிடம் இல்லை. அவர்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லை. இன்னும் எதிர்த்தீ வைப்பு முறையே பின்பற்றப்படுகிறது. வருடத்தில் 5 மாதங்கள் வனத்தீ தடுப்பு காவலர்களை தற்காலிகமாக பணியமர்த்துகிறார்கள்.


தொடர்ச்சியாக வனப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக வாழ்க்கையைக் கடந்த வன அர்ப்பணிப்பாளர்களை எனக்குத் தெரியும். அவர்களின் அனுபவ அறிவு விசாலமானது. 
சமீபத்தில் மேட்டுப்பாளையம் அருகே யானைக் குட்டியை மீட்டு தோளில் சுமந்து சென்று தாயிடம் விட்ட தற்காலிகப் பணியாளர்களை நாம் பார்த்தோம். இந்த அரசு இவர்களைக் கண்டு கண்டு கொண்டதே இல்லை.

நீலகிரியில் வனஉயிர் காக்கும் மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டபின் அங்கு இதுவரை மருத்துவர் நியமிக்கப்படவில்லை.

வருடம் தோறும் தான் தீப்பற்றி எரிகிறது கானகங்களில் கடந்த இரு மாதஙகளாக தீ ஆங்காங்கே எரிந்து கொண்டுதானிருக்கிறது. நேற்று மலையேற்றத்திற்கு சென்றவர்கள் சிக்கிக் கொண்டதால் இப்போது விவாதிக்கப்படுகிறது.

மலையேற்றம் செல்பவர்களும் வனச்சூழல் அறிந்து செல்ல வேண்டும். கூடவே செல்லக்கூடிய வனத்தைப்பற்றி அறிந்தவர்கள் உடன் இருப்பது மிக அவசியம். சில மீடியாக்கள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசு தாமதமாக ஹெலிகாப்டர்களை அனுப்புகிறது.

எப்போதும் போல் மக்கள் தான் களத்தில் முதலில் இறங்கியுள்ளார்கள் அந்த குரங்கனி எஸ்டேட் மக்களுக்கு அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்வோம்.

அரசு நவீன கருவிகளை இனிமேலாவது வாங்க வேண்டும். வனத்துறையை இன்னும் நவீனப்படுத்த வேண்டும். இந்த தீவிபத்து மட்டுமல்ல எல்லா பேரிடர் காலங்களிலும் இது தான் நிலைமையாகவே இருக்கிறது.

மேலும் மக்களாகிய நாம் மட்டும் சரியாக இருக்கிறோமா? அந்த காட்டில் தீ வைத்த யார்?

No comments:

Post a Comment